திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.8 திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
    வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
    கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
    தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
1
வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
    விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்
    கறைசேர் மணிமிடற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
    நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்வெய்
    ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.
2
கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
    கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
    இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
    பார்ப்பாலைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
3
பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
    படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
    இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றனர் பெண்ணோர் பாகம்
    பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
4
உருளுடைய தேர்புரவி யோடும் யானை
    ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
    இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
    புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
5
வீறுடைய ஏறேறி நீறு பூசி
    வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
    குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
    பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
6
கையோர் கபாலத்தர் மானின் றோலர்
    கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
    திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாகத் துமையை வைத்து
    மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
7
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
    றொற்றியூர் உம்மூரே உணரக் கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
    நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
    இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
    டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
8
கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்
    கடியவிடை யேறிக் காணக் காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
    என்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
    துருத்தி பழனமோ நெய்த்தானமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
9
மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
    மணிமிழலை மேய மணாளர் போலுங்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங்
    கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந்
    தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
    அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com